அமைச்சர் செந்தில் தொண்டமானின் தந்தைக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in சமூகம்

ஆறு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கே.எம். முத்து விநாயகம் உட்பட இரண்டு சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் சம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால், சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராக சட்டத்தரணிகள், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் அன்றைய தினம் பிணை கோரிக்கை குறித்து ஆராயவதாகவும் கூறியுள்ளார்.

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான குருணாகல் மெல்சிறிபுரவில் உள்ள பண்ணையில் இருக்கும் உணவகத்தை குத்தகைக்கு வழங்க வர்த்தகர் ஒருவரிடம் 6 லட்சம் ரூபாய் லட்சம் பெற்ற போது, இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால், முத்து விநாயகம் உட்பட சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

முத்து விநாயகம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.