அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி கூறியது என்ன?

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி மாவட்ட மகளிர் சிவில் வலய அமைப்பின் பிரதிநிதிகளால் நுண்கடன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திற்கு சென்ற சிவில் வலய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இன்று காலை 10.30 மணியளவில் மகஜரை கையளித்துள்ளனர்.

அண்மையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிற்கு அரசினால் முன்னுரிமை எனும் அடிப்படையில் நுண்கடன் திட்டத்தில் கொண்டு வந்த சலுகை கிளிநொச்சி மாவட்டத்திற்கு திருப்தி அளிக்கவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் பேசி மாவட்டத்தில் நுண்கடனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்று கொடுக்குமாறும் தெரிவித்து குறித்த மகஜர் கையளித்துள்ளதாக சிவில் வலய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிறீதரன் கருத்து தெரிவிக்கையில்,

“இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே நாடாளுமன்றில் பேசியதாகவும், கிழக்கில் 40க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும், அதேபோன்று வடக்கிலும் 49க்கு மேற்பட்ட தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அரசினால் தீர்வு முன்வைக்கப்பட்ட போதிலும் நடைமுறைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அரசிடம் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் செய்தியாளர் சிறீதரனிடம் வினவிய போது,

“தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தமிழரசு கட்சி தலைவர் கடந்த 17ம் திகதி இறுதியான முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

ஆனால் எதுவும் எட்டப்படவில்லை என அவரிடம் வினவிய போது,

“கடந்த 17ம் திகதி ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் எமது தலைவர் சம்பந்தனால் முன்வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக நடவடிக்கை எடுத்தால் சிங்கள மக்கள் மத்தியில் குழப்பமான சூழல் ஏற்படும்.

இந்த நிலையில் அவர்களை அரசியல் கைதிகள் என்ற வகையில் விடுவிப்பது கடினம் எனவும், நீதிமன்ற நடவடிக்கை ஊடாக விடுவிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் பேசப்பட்டது,

எனினும் பிரதமர் நாட்டில் இல்லை என்பதால் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக தீர்மானம் எட்டப்படாத நிலை காணப்பட்டதாகவும், அவர் நாடு திரும்பியதும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக அவர்களை விடுதலை செய்வது என்பது உடனடியாக சாத்தியமற்றது எனவும், அதற்கு நீண்ட காலம் எடுக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த விவகாரம் தொடர்பில் வரவு செலவு திட்டத்தின் போது நிபந்தனைகள் முன்வைக்கப்படுமா என அவரிடம் வினவிய போது,

“வரவு, செலவு திட்டத்தில் வேறு பல விடயங்கள் பேசவேண்டி உள்ளது. அதற்குள் இவ்விடயம் வராது. மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பெற்று வரவு, செலவு திட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே நிலைப்பாடு” என அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசாங்கம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். உண்மையில் உங்கள் நிலைப்பாடு என்ன என அவரிடம் வினவியபோது,

“நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சந்தர்ப்பங்களை அவதானித்து அதற்கேற்ப கருத்துக்களை கூறி வருகின்றார்.

ஒரே கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்து தொடர்பில் நானும் கருத்து கூற முடியாது” என அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers