திருகோணமலையில் பொலிஸார் சுற்றிவளைப்பு! பலர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, மூதூர் மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மூதூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்,

அனுமதிப்பத்திரமின்றி கங்கைக்குள் உழவு இயந்திரத்தை இறக்கி மணல் ஏற்றிக்கொண்டிருக்கும் போது கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் சுற்றிவளைப்பை முன்னெடுத்த வேளை இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய், கல்மெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உழவு இயந்திரம் மற்றும் பைபர் வள்ளம் ஒன்றினை கைப்பற்றியுள்ளதாகவும் விசேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் சாரதி ஒருவரை கைது செய்துள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சந்தேக நபர்களை மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்,

கண்டல் காடு சாவு எனும் பகுதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதில் குறிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற கிண்ணியா புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இன்றைய தினம் திருகோணமலை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.