தேயிலை தயாரிப்புகளை ஸ்தம்பிதமடைய செய்வோம்: பத்தனை தொழிலாளர்கள் எச்சரிக்கை

Report Print Thirumal Thirumal in சமூகம்

நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள கொட்டகலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் பத்தனை கிறேக்கிலி தோட்டதொழிலாளர்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் இன்று காலை 9 மணியளவில் ஈடுபட்டனர்.

சுமார் 200ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து பத்தனை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, எதிர்ப்பு வாசகங்களை எழுதிய சுலோகங்களையும் ஏந்தியவாறு பத்தனை நகரம் வரை ஊர்வலமாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதற்கு பத்தனை நகர வர்த்தகர்களும் கடைகளை அடைத்து ஆதரவு வழங்கினர்.

பண்டிகை காலம் நெருங்கும் இந்த காலப்பகுதியில் நிம்மதியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வாழ்வாதார அடிப்படையில் பொருளாதார சிக்கல்களுக்குள்ளாகியிருப்பதாக இதன்போது தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்காவிட்டால் தேயிலை தொழிற்சாலையிலிருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகின்ற தேயிலை தூளை தொழிற்சாலையிலிருந்து தடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி சுகபோக வாழ்க்கையை நடத்தும் கம்பனிகாரர்கள் இன்றைய வாழ்வாதாரத்தினை நினைவில் வைத்துக் கொண்டு அடுத்த கட்டபேச்சுவார்த்தையை இறுதி பேச்சுவார்த்தையாக முன்னிறுத்தி ஆயிரம் ரூபாய் சம்பளஉயர்வை வழங்க வேண்டும் என அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்தனர்.