அம்மாவையும் கொன்று எனது இரு கைகளையும் கணவர் வெட்டினார்: ஜனாதிபதிக்கு பெண்ணொருவர் கடிதம்

Report Print Manju in சமூகம்

”எனது கணவர் அம்மாவைக் கொலை செய்ததுடன் எனது இரண்டு கைகளையும் வெட்டினார். உதவியற்ற நிலையில் இருக்கும் எனக்கு பொலிஸார் நியாயமான தீர்வை வழங்கவில்லை” என தெரிவித்து நீதி கோரி ஜனாதிபதிக்கு பெண்ணொருவர் கடிதம் எழுதியுள்ளார்.

அனுராதபுரம் அனுகட்டியாவ வீதியில் பரஸ்சன்கஸ்வாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான டி.ஆர். எம் எஸ் நிசன்சலா என்ற பெண்ணொருவரே இவ்வாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2014 ம் ஆண்டு எனது கணவர் குடித்துவிட்டு என் அம்மாவை கொலை செய்து, என் கைகளை வெட்டிய பின்னர், நாங்கள் உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டோம். என் சகோதரி தான் என்னை கவனித்துகொண்டார். அதன்பின்னர் கணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் எங்களிடம் இருந்த பொருட்களை விற்று வருமானத்திற்காக முச்சக்கர வண்டியொன்றை வாங்கி சிறிய வியாபாரத்தை மேற்கொண்டோம்.

இந்த நிலையில், கணவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீண்டும் குடித்துக்கொண்டு எங்களைக் கொலை செய்து விடுவார் என்ற பயத்தில் மறைந்து வாழ்ந்து வந்தோம்.

ஒரு நாள் கணவர் என் சகோதரியின் கழுத்தில் கத்தியால் வெட்டினார். சகோதரி கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

அனுராதபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது அவர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த சம்பவத்தின் பிறகு கணவர் தற்கொலை செய்துகொண்டார் என அப்பெண் தெரிவித்துள்ளார்.

Latest Offers