சுறாக்களை பிடிக்காமல் நெத்திலி மீன்களை பிடிக்க வேண்டாம் - சீ.ஐ.டியினருக்கு கடுமையாக உத்தரவிட்ட நீதிமன்றம்

Report Print Steephen Steephen in சமூகம்

சுறாக்கள் வெளியில் இருக்கும் போது நெத்திலி மீன்களை பிடிக்க வேண்டாம் என கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆகிய சம்பவம் தொடர்பில் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை செயற்படுத்தாமல் இருப்பது தொடர்பாகவே நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்தை குற்றச்சாட்டும் வகையில் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் தாமதப்படுத்தாது கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் , குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான முன்னாள் கடற்படை அதிகாரியான நேவி சம்பத் என்ற லெப்டினட் கமாண்டார் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, தலைமறைவாக இருக்க, அன்றைய கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் தலைமை அதிகாரியுமான ரவிந்திர விஜேகுணரட்ன உதவியமை சம்பந்தமான குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை முன்வைத்திருந்தனர்.

அப்போது கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி, விஜேகுணரட்ன, கட்டார் ஊடாக மெக்சிகோ நாட்டுக்கு சென்று, அந்நாட்டின் சுதந்திர தின விழாவில், ஜனாதிபதியின் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்டார்.

விஜேகுணரட்ன, அமெரிக்காவில் புகலிடம் கோரியுள்ளதாக அப்போது தகவல் வெளியாகி இருந்தது. எனினும் அவ்வாறு புகலிடம் கோர முடியாது என தெரியவந்தது.