இராணுவ அதிகாரி குற்றமற்றவர் என்பதை நிரூபித்து ஐ.நா அமைதிகாக்கும் படையில் மீள இணைப்போம் - இராணுவம்

Report Print Ajith Ajith in சமூகம்

மாலியிலிருந்து மீள அழைக்கப்படவுள்ள இலங்கை படையின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன பிரியங்கார லங்காமித்ர அமுனுபுரே, குற்றமற்றவர் என்பதை நிரூபித்து, அவரை அமைதிகாக்கும் படையில் மீள இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் மாலியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன பிரியங்கார லங்காமித்ர அமுனுபுரேவை உடனடியாக மீள அழைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அன்டோனியோ குட்டேரஸ், இலங்கை அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார் என நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட யஸ்மின் சூகாவின் தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படையினர் தொடர்பாக அறிக்கையில் தகவல்களை வெளியிட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த அறிக்கையானது சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால், ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த இலங்கை அதிகாரியினது மனித உரிமை பதிவுகள் பற்றிய அண்மைய தகவல்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து,

ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை மீள அழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை இராணுவம், போர்க்குற்றங்களுடன் தொடர்புபடவில்லை என்றும், அந்த அதிகாரி குற்றமற்றவர் என்பதை நிரூபித்து, ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் அவரை மீள இணைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.