சர்வதேச ரீதியாக சாதனை படைத்த இலங்கை சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Report Print Vethu Vethu in சமூகம்

சர்வதேச ரீதியாக சாதனை படைத்த இலங்கை வீராங்கனைக்கு கொழும்பில் வீடு ஒன்றை பரிசாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற கோடைக்கால மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு பதக்கம் பெற்று கொடுத்த சிறுமிக்கே வீடு வழங்கப்படவுள்ளது.

பெண்களுக்கான 2000 மீற்றர் தடைத் தாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா என்ற 16 வயது வீராங்கனை மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு வெண்கலப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

சிலாபம் - இரணவில பிரதேசத்தை சேர்ந்த சிறுமிக்கு கொழும்பில் வீடு ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று காலை சிறுமியின் வீட்டிற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அவர் தற்போது வசிக்கும் சிலாபம் வீட்டினையும் 10 நாட்களுக்குள் புனரமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

வீட்டின் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் புத்தளம் மாவட்ட அதிகாரிக்கு, ராஜாங்க அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, சிலாபம் பிரதேசத்தை ஏழ்மையான மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.