முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் அமைதியின்மை!

Report Print Ashik in சமூகம்

மன்னார் - முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீரென கடற்படையினர் முற்கம்பிகளை இட்டு மறித்தமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்துள்ளார்.

இதன்போது, முள்ளிக்குளத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

முள்ளிக்குளம் ஆலயத்தில் இன்று காலை திருப்பலி நிறைவடைந்த நிலையில் மக்கள் மீண்டும் திரும்பிச் செல்லுகின்ற போது கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் குறித்த வீதிகளில் சென்ற மக்களை இடை மறித்தனர்.

இதனால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் மக்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, எதேர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முள்ளிக்குளம் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

சிறிது நேரம் மக்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் தர்க்க நிலை தொடர்ந்தது, பின்னர் சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ச்சியாக முள்ளிக்குளம் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனினும், உயர் அதிகாரியிடம் இருந்து வந்த உத்தரவிற்கு அமைவாகவே குறித்த பாதைகளை மூடியதாக தெரிவித்த கடற்படையினர் மக்கள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மூடி வைத்திருத்த வீதிகளை மீண்டும் மக்களின் பாவனைக்காக கடற்படையினர் திறந்து விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக குறித்த விடயத்தில் தலையிட்டு முள்ளிக்குளம் மக்களின் சுதந்திர வாழ்வுக்கு வழியமைத்துக் கொடுக்க வேண்டும் என முள்ளிக்குளம் பங்குத் தந்தை லோரான்ஸ் லியோ குறிப்பிட்டுள்ளார்.