லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயார்வெல், பெல்கிரேவியா, வலகா, பேரம், இராணிவத்தை, பம்பரகலை, நோனாதோட்டம், தலாங்கந்தை, கல்கந்தை ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 2000 ற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் - நுவரெலியா பிரதான பாதையின் போக்குவரத்து சுமார் 4 மணித்தியாலங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கக்கோரி பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டுள்ளதுடன் இந்த சம்பள விடயத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் தலையிட்டு தங்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை பல தடவைகள் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற போதிலும் அதில் எவ்வித தீர்மானமும் எடுக்காத காரணத்தினால் கடந்த சில வாரகாலமாக தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பொது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என இன்று நாட்டில் வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இதனை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.