கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அதிக விழிப்புணர்வு தேவை

Report Print Rusath in சமூகம்

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் குடியிருப்பாளர்களிடையே அதிக விழிப்புணர்வு தேவையாக உள்ளதென மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, கோட்டைமுனை லேடி மெனிங் ரைவ் பிரதான வடிகானை சுத்தம் செய்யும் பணிகள் நேற்று இடம்பெற்றுள்ளன.

குறித்த சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாநகரசபையின் கழிவு முகாமைத்துவத்தை இலகுபடுத்தும் நோக்கோடு குடியிருப்பாளர்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆயினும், கழிவு முகாமைத்துவம் முறையாக கடைப்பிடிக்காமல் விடப்படுவதினால் ஆளணி உள்ளிட்ட பல்வேறு வலுக்கள் வீண் விரயம் செய்யப்படுன்றன.

மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் வெள்ள நீர் இலகுவாக வடிந்தோடும் வகையில் வெள்ள நீர் செல்லும் பிரதான வடிகானினுள் குடியிருப்பாளர்கள் கழிவு நீரை விடுவதனால் கழிவு முகாமைத்துவம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது.

கான்களுக்குள் செல்லும் கழிவு நீர்க் குழாய்களை இனங்கண்டு அடைத்து வருகின்றோம். அவற்றை மீறி செயற்படுபவர்களுக்கு மாநகர கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக எந்தவித பாகுபாடும் காட்டாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாநகரசபை சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார மேற்பார்வையாளர்களின் வழிகாட்டலில் இந்த வடிகான் சுத்தம் செய்யும் பணியில் மாநகர சுகாதார தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.