முரண்பாடுகளைத் தீர்க்குமாறு முடிந்தவரை சொல்லிப் பார்ப்போம்

Report Print Rusath in சமூகம்

கல்விச் சேவைகளிலுள்ள முரண்பாடுகளைத் தீர்க்குமாறு நாம் முடிந்தவரை சொல்லிப் பார்ப்போம், அதில் எமக்கு சாதகமான முடிவுகள் வராவிட்டால் எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மஹாஜனக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு இடையிலான பதவிப் படித்தர சம்பள முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் முகமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.

இதன்போது மேலும் ஜோசெப் ஸ்டார்லின் கருத்து தெரிவிக்கையில்,

“மாகாண கல்விப் பணிப்பாளர் ஒருவரை எவ்வாறு நியமிப்பது என்பது பற்றி கல்வி நிர்வாக சேவை பிரமாணக் குறிப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனத்தில் இவை ஒன்றுமே பின்பற்றப்படவில்லை.

கல்வி நிர்வாக சேவை பிரமாணக் குறிப்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவிலிருந்து மூவரும், ஆளுநர் நியமிக்கும் அதிகாரி ஒருவருமாக 4 பேர் கொண்ட குழு அமைத்து அதன் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி மாகாண பணிப்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரை நியமனம் செய்தது பிழையான நடவடிக்கையாகும். யாராக இருந்தாலும் கல்வி நிர்வாக சேவை பிரமாணக் குறிப்புக்கு அமையவே நிர்வாகம் இடம்பெற வேண்டும்.

இவ்வாறான பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு உள்ளது.

எமது தொழிற்சங்கம் அவ்வாறு இல்லாமல் சுயமாக தொழிலாளர்களின் நலனுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் இயங்கும் சங்கமாகும்.

பாடசாலைகளில் கைவிரல் அடையாளம் இடல் தொடர்பில் இங்கு பேசப்பட்டது. சில பிரதேசங்களில் இது ஒரு பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் கைவிரல் அடையாளம் இடும் முறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

கல்வி அலுவலகங்களில் இந்த கைவிரல் அடையாளம் இடும் இயந்திரம் பொருத்தலாம் என சொல்லப்பட்டுள்ளதே தவிர பாடசாலைகளில் கைவிரல் அடையாளம் இடவேண்டும் என சொல்லப்படவில்லை.

இது சில பாடசாலைகளில் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. பாடசாலை செல்லும் போது ஆசிரியர்களுக்கு 15 நிமிடம் சலுகை காலம் என சுற்றறிக்கையில் உள்ளது. இதுவும் சில பாடசாலைகளில் அனுசரிக்கப்படுவதில்லை.

கைவிரல் அடையாம் தொடர்பான பிரச்சினையை நாம் ஜனாதிபதியிடமும் மாகாண ஆளுநரிடமும் பேசியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.