கொட்டகலையில் ஹர்த்தால்: போக்குவரத்து ஸ்தம்பிதம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி கொட்டகலை நகர தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டகலை பிரதேசசபைக்கு முன்பாக அணிதிரண்ட கொட்டகலை பிரதேச தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக கொட்டகலை வூட்டன் நகருக்கு வந்து பிரதான வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொட்டகலை நகர தோட்டத் தொழிலாளர்கள், நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், வான் சாரதிகள், இளைஞர் மற்றும் யுவதிகள் என பலரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொட்டகலை நகர வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்களை மூடி ஆதரவு வழங்கியுள்ளதோடு, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.