அர்ஜூன் அலோசியஸின் மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் முறைகேடு நடந்தமை மற்றும் அரசு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸின் மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் மனரீதியான பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதை விசேடமான விடயமாக கருதி, சந்தேக நபருக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சட்டத்தரணி அனில் சில்வா இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமான சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று அடுத்த வழக்கு விசாரணையின் போது தெரியப்படுத்துமாறு அறிவித்த நீதவான், அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் பிணை கோரிக்கைகளை கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பன ஏற்கனவே நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.