தமிழ் அமைச்சர் ஒருவருக்காக வீதியை துப்பரவு செய்த மாணவர்கள்! சர்ச்சையை ஏற்படுத்தும் புகைப்படங்கள்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

அமைச்சர் மனோகணேசனின் வருகைக்காக கிளிநொச்சி பூநகரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களை வைத்து வீதியை துப்புரவு செய்தமை தொடர்பில் பலர் அதிருப்தி வெளியிட்டு வருவதுடன் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

பூநகரி பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக இன்றைய தினம் அமைச்சர் மனோ கணேசன் அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், அமைச்சரின் வருகைக்காக பாடசாலை மாணவர்களை வைத்து பாடசாலைக்கு செல்லும் வீதி துப்புரவு செய்யப்பட்டுள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் சிறிய மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் நின்று வீதியை துப்புரவு செய்துள்ளார்கள்.

இதனை ஊடகவியலாளர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ள போதிலும், அந்த புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என சிலர் ஊடகவியலாளரை வலியுறுத்தியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், ஒரு அமைச்சரின் வருகைக்காக சிறிய மாணவர்களை மழையில் வைத்து வீதியை துப்புரவு செய்தமை பாரிய பிழை என அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.