சவுக்கடியில் தாயும் மகனும் படுகொலை! கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய சவுக்கடி பிரதேச மக்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று முன்னெடுத்துள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக வேண்டாம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

26-10-2017 அன்று தாயும் மகனும் கடுமையான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் அங்கிருந்த தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும், சவுக்கடியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியும் கைது செய்யப்பட்டிருந்ததுடன் கொள்ளையிடப்பட்டிருந்த நகைகளும் மீட்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.

தற்போது குறித்த கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோரை பாதுகாப்பதற்கு சில சட்டத்தரணிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனை அவர்கள் கைவிடவேண்டும் எனவும் போராட்டத்தில் பங்கெடுத்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கி இன்னுமொரு தடவை இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத வகையில் சட்டத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.