வடக்கு ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Report Print Ashik in சமூகம்

ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்றத்தில் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் படையினர் வசம் இருக்கின்ற காணிகளை விடுவிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்றாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி, வட மாகாண ஆளுநரான என்னிடம் பனிப்புரையினை விடுத்திருந்தார். வட மாகாணத்தில் உள்ள மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மற்றும் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக ஆராய்வதற்காக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறிப்பாக விடுவிக்கப்பட்ட காணிகள் தவிர்ந்த விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது. குறிப்பாக மன்னார் சகர நுழைவாயிலில் இராணுவ வசம் காணப்பட்ட கூட்டுறவு சங்கத்திற்கான கட்டடம் காணப்பட்ட இடம் எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுறவு திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முள்ளிக்குளம் பிரதேசத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 100 ஏக்கர் காணயில் 23 ஏக்கர் காணியினை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும் கடற்கடையினர் தமக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகின்றமையினால் ஒரு சில மாதங்களில் குறித்த 23 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவுள்ளனர்.

இதேபோன்று மன்னார் மாவட்டத்தில் சிலாபத்துறை கடற்படை முகாம், பேசாலையில் மீன் பிடி திணைக்களத்திற்கு சொந்தமான இராணுவம் தற்போதுள்ள காணி விடுவிப்புக்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

மேலும் காணி விடுவிப்பு தொடர்பில் மேலும் ஒரு கூட்டத்திற்கு வரும் போது விடுவிக்கப்பட வேண்டிய காணிகளின் தரவுகளை கடற்படையினர், இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் உரிய முறையில் வழங்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டது.

மேலும் வன இலாக திணைக்களம்,வன ஜீவராசிகள் திணைக்களம் தொடர்பாகவும் மாவட்டத்தில் இருக்கின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் பிரதேசசபையின் தலைவர் எம்.முஜாகிர், மாவட்ட மேலதிக செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், இராணுவம், கடற்படை, வான்படை, பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers