அரசியல் மோதலால் இலங்கை மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அவல நிலை!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கை முழுவதும் எரிபொருள் விநியோக நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக துறைசார் தொழிற்சங்க அமைப்புகள் அறிவித்துள்ளனர்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் நேற்று நடந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய கிளையின், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் உப தலைவர் பிரேமரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தங்கள் ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி பணி பகிஷ்கரிப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாரிய மக்கள் வரிசை ஒன்றை அவதானிக்க முடிந்துள்ளது.

பணி பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊழியர்கள் பணியில் இருந்து நீங்கியுள்ளனர்.

சப்புகஸ்கந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து அதிகாரிகள் தங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அந்த நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.