இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் ஏழு பதக்கங்களை பெற்று தமிழ் மாணவன் சாதனை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் முதற்தடவையாக ஏழு பதக்கங்களைப் பெற்று தமிழ் மாணவன் சாதனை படைத்துள்ளார்.

சம்மாந்துறை, கோரக்கர் கிராமத்தை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமாரே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.

இதற்கு முதல் 2012ஆம் ஆண்டில் கனிந்து நாணயக்கார என்ற கண்டுபிடிப்பாளர் மொத்தமாக 5 பதக்கங்களை பெற்று தனியொருவருக்கான உச்சக்கட்ட சாதனையை படைத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த சாதனையை முறியடித்து இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களையும் அதற்கான பரிசாக 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தையும் பெற்றுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி இலங்கை ஆய்வாளர்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு பி.எம்.ஐ.சி.எச்சில் நடைபெற்ற 3ஆவது தேசிய புத்தாக்குனர் தின விருது வழங்கும் விழாவில் அதிகூடிய 7 பதக்கங்களைப் பெற்ற சோ.வினோஜ்குமார் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை கோரக்கர் கிராமத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் இதுவரை 86 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார்.

இவற்றில் 38 கண்டுபிடிப்புகள் தேசியமட்டத்தில் விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளன. 3 கண்டுபிடிப்புகள் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.