25 வருடங்களுக்குப் பிறகு நாம் வடக்கு கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தினோம். ஆனால் தற்போது மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றதாக தெரியவில்லை.
இதற்கு அமைதியாக இருக்கும் சிலர், நாடாளுமன்றத்தை ஜனாதிபதி 11 நாட்கள் தள்ளி வைத்தமைக்காக பெரும் போராட்டத்தை நடத்துகின்றனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
நவம்பர் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரைக்குமே நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் வேறு எந்த ஜனாதிபதியும் இதை செய்யவில்லை என நினைக்கின்றார்கள். நான் கூட செய்திருக்கின்றேன். பிரேமதாச மாதக்கணக்கில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார்.
நாம் ஆட்சிக்கு வருவது இயற்கைக்கு முன்னதாகவே தெரிந்திருக்கின்றது போல. அதனால் தான் தற்போது மழை பெய்கின்றது, வறட்சி போய்விட்டது. இது இயற்கை தந்த ஆசீர்வாதம்.
இலங்கையில் உற்பத்தி செய்த பொருட்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதை தடுத்து இலங்கையில் உள்நாட்டு உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
முன்னதாக ஜனாதிபதியாக இருந்த போது நிதி அமைச்சராக இங்கே வந்தேன். தற்போது பிரதமராகி இங்கு வந்துள்ளேன். புதியவர்களும் இருக்கின்றீர்கள், பழையவர்களும் இருக்கின்றீர்கள். நாம் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்.
மக்களின் ஆணையை ஏற்ற காரணத்தினாலேயே பல பிரச்சினைகளை கடந்து இந்த இடத்திற்கு வந்துள்ளோம். எனக்கு இதை கைவிட்டு செல்வது என்பது இலகுவான விடயம்.
2015 ஜனவரி 9ஆம் திகதி காலை 6 மணிக்கே மக்களது தீர்ப்பு என்ன என்று தெரிந்து கொண்டு கை காட்டி விட்டு சென்று விட்டேன்.
ஆனால் சிலருக்கு அவ்வாறு செல்வது கடினம். அழுது அழுது கொண்டு உள்ளேயே இருப்பார்கள். ஆனால் வெளியில் இருப்பவர்கள் சிரிப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. என மஹிந்த தெரிவித்துள்ளார்.