வவுனியாவில் வடமாகாண ஆளுநர் பங்குபற்றிய கலந்துரையாடல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா மாவட்ட காணி தொடர்பிலான கூட்டத்திற்கு பிரதேச செயலாளர்கள் காணி விபரங்களின்றி வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண ஆளுநரின் பங்குபற்றுதலுடன் நேற்று இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும், வனவள திணைக்களம் மற்றும் தொல்பொருட் திணைக்களத்தின் கீழ் உள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது, வவுனியா மாவட்டத்தில் படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள காணிகளின் விபரங்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கோரியிருந்தார்.

ஆனால், அரச அதிகாரிகளிடம் குறித்த காணிகளின் விபரங்கள் முழுமையாக இல்லாமையால் அவை தொடர்பில் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை. அடுத்த கூட்டத்தில் இது தொடர்பில் முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட சில காணிகள் இன்னும் முழுமையாக மக்களிடம் ஒப்படைக்கப்படாது இராணுவமே பயன்படுத்தி வருவதாக இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இக்கருத்துக்கள் தொடர்பில் கேட்டறிந்த ஆளுநர் இவை தொடர்பாக தகவல்களை விரைவாக பெற்று தருமாறு மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.