இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுவிக்கப்படும் எச்சரிக்கை மீறப்பட்டுள்ளது! எஸ்.லிங்கேஸ்வர குமார்

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுவிக்கப்படும் அறிவுறுத்தலையும் எச்சரிக்கைகையும் மீறி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் செயற்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வர குமார் தெரிவித்துள்ளார்.

கரைத்துறைப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட அரசத் திணைக்கள அதிகாரிகளுக்கான வட கீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கால முன்னாயத்தம் தொடர்பான கூட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவேண்டாமென அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டாலும் அவ்வறிவித்தலை மீறி அவர்கள் கடலுக்குச் செல்வதாகக்கடற்படையினர் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனவே இது தொடர்பில் மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரி தெளிவுபடுத்த வேண்டும் இதற்கு பதிலளித்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கலிஸ்ரன் முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழிலாளர்களை தொழில் நடவடிக்கைக்குச் செல்ல வேண்டாமென அரசாங்கத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டால் அதற்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென கடற்றொழிலாளர்கள் குறிப்பிடுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து கருத்துரைத்த மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வர குமார் கடற்றொழிலாளர்களின் உயிர்பாதுகாப்புக் கருதியே வானிலை காலநிலை மாற்றம் தொடர்பிலும் கடலின் தாக்கம் தொடர்பிலும் அரசாங்கம் அறிவுறுத்தல் விடுப்பதாகவும் இதற்கு நிவாரணம் வழங்க முடியாதெனவும் தெரிவித்தார்.

அத்துடன் வறட்சி காலத்தில் கடற்றொழிலாளர்களின் குடும்பங்களையும் உள்வாங்கி அவர்களுக்கும் நிவாரணம் வழங்குகின்ற நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் கூறினார்.