யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி குறித்து எழுந்துள்ள சர்ச்சை!

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா? அவற்றை அகற்றுவதற்கு நீதிமன்றக் கட்டளை பெற முடியுமா? என்று சட்ட மா அதிபரிடம் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனை கேட்டுள்ளார்.

இந்த விடயத்தை யாழ்.நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி யாழ்ப்பாண மாநகர சபையால் இரும்பு வேலி அமைக்கப்பட்டது.

அந்த வேலியை அகற்றுதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கு கட்டளையிடுமாறு கோரி யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில் யாழ். பொலிஸார் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மன்றில் முன்னிலையானார்.

அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பணம் முன்வைத்தார்.

“அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடந்த வருடம் நிதி ஒதுங்கி இருந்தார். அதன் பிரகாரம் சுற்றுவேலி அமைக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக இவ்வருட நிதி ஒதுக்கீடாக நான் 2 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளேன்.

இதன் பிரகாரம் யாழ். மாநகர சபை தனது தீர்மானங்களுக்கு ஏற்ப இதனை முன்னெடுக்கிறது. எங்களால் ஒதுக்கப்பட்ட இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தார்.

அதனை ஆராய்ந்த மன்று அவசர கட்டளையை வழங்க மறுத்ததுடன், வழக்கை கடந்த 29ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

இந்த நிலையில் வழக்கு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா? அவற்றை அகற்றுவதற்கு நீதிமன்றக் கட்டளை பெற முடியுமா? என்று சட்ட மா அதிபரிடம் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனை கேட்டுள்ளார்.

அதுதொடர்பான விளக்கத்தை சட்ட மா அதிபர் வழங்குவதற்கு அவகாசம் வழங்கி வழக்கை தவணையிடவேண்டும் என்று பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

இதேவேளை, அதனால் வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதிவரை நீதிமன்று ஒத்திவைத்தது.