லக்ஸ்மன் கதிர்காமர் கொலை: 13 வருடங்களின் பின்னர் தமிழ் கைதிக்கு கிடைத்த மகிழ்ச்சி

Report Print Dias Dias in சமூகம்

முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 13 வருடங்களின் பின்னர் இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராட்சியால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இசிதோர் ஆரோக்கியநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்டோருடன் இணைந்து சதி செய்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்தமைக்கு உடந்தையாக செயற்பட்டதாக பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் சகாதேவன், ஆரோக்கியநாதன் ஆகிய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் 5 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 2008ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதனுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அரச தரப்பில் 15 பேர் சாட்சியமளித்தனர்.

மேலும் அரச தரப்பில் இரண்டாம் எதிரியால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றினால் உண்மை விளம்பல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த வாக்குமூலம் சுயமாக வழங்கப்படவில்லை எனவே அதனை அரச சான்றாக ஏற்றுக்கொள்ள முடியாதென மேல் நீதிமன்றம் கடந்த 03.10.2018 அன்று நிராகரித்திருந்தது.

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றையதினம் மேலதிக விசாரணைக்கு வந்த வேளை எதிரியின் தரப்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தில்,

இந்த வழக்கில் அரச தரப்பில் காலஞ் சென்ற முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த படையினரும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் அரச தரப்பில் சாட்சியமளித்திருந்தனர்.

ஆனால் அவர்களுடைய சாட்சியங்களில் இரண்டாம் எதிரிக்கெதிராக எந்தவித சான்றுகளும் முன்வைக்கப்படாதது மட்டுமன்றி இந்த சாட்சியங்களில் உள்ள பல முரண்பாடுகளையும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

மேலும் தனது வாதத்தில் இந்த கொலை சம்பவம் அதியுட்ச பாதுகாப்பு வளையத்தில் நடந்த போதிலும் நேரடியான கண்கண்ட சாட்சியங்ளோ சூழ்நிலை சான்றுகளோ அரச தரப்பினால் இந்த வழக்கில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன், அரச தரப்பால் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட ஒரே சான்றான குற்றஒப்புதல் வாக்குமூலமும் இந்த நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால் இரண்டாம் எதிரியை விடுதலை செய்யுமாறு தனது வாதத்தை முன்வைத்தார்.

இரு தரப்பினரதும் வாதபிரதிவாதங்களை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராட்சி சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் சட்ட வாதத்தை ஏற்று இரண்டாம் எதிரி ஆரோக்கியநாதனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

Latest Offers