அரசியல் சூழ்ச்சி காரணமாக இலங்கை மக்கள் இழக்கவுள்ள அதிர்ஷ்டம்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சி காரணமாக உலக நாடுகள் கடும் விசனம் தெரிவித்துள்ளன.

பல நாடுகள் இலங்கையில் மேற்கொண்டு வரும் முதலீடுகளை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரியின் ஆட்சி மாற்ற சூழ்ச்சி ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்ச்சிமிக்க ஆட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கும், இலங்கையினுள் முதலீடு செய்வதற்கும் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த ஆட்சியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தும் இலகு ரயில் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி கொள்வதற்கு ஜப்பான் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1700 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டு மாலபேயில் இருந்து புறக்கோட்டை வரை நிர்மாணிக்கப்படவுள்ள இலகு ரயில் திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கைகள் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்திற்கு தேவையான பிரதேசத்தை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் அதன் திட்டத்தை முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு 2020ஆம் ஆண்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருந்தது. அத்துடன் 2024ஆம் ஆண்டு திட்டத்தை முழுமைப்படுத்தி மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

இதன் முழுமையான நடவடிக்கைகளுக்கு ஜெய்க்கா நிறுவனத்தினால் நூற்றுக்கு 0.1 வீத வட்டிக்கமைய நிவாரண கடன் வழங்க இணங்கப்பட்டது.

எனினும் தற்போது தற்காலிகமாக இந்த திட்டத்தை கைவிட ஜப்பான் நிறுவனம் தீர்மானித்துள்ள நிலையில், இது இலங்கை அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்துள்ளதாக துறைசார் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் திட்டம் கைவிடப்படும் பட்சத்தில் போக்குவரத்து துறையில் மக்களுக்கு கிடைக்கவிருந்த வரப்பிரசாதமும் இல்லாம் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.