திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக வீதிகள், வடிகால்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலையிலிருந்து பெய்து வருகின்ற மழை காரணமாக தொழிலுக்கு செல்வோர் மற்றும் பயணிகள் மழையினால் பல சிரமங்களுக்கு உள்ளானதோடு, மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் கந்தளாய், கிண்ணியா மற்றும் திருகோணமலை, மூதூர் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கந்தளாயில்,

கந்தளாய் பகுதியில் 20ற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதால் மக்கள் அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்பிரதேச மக்கள், “அரசியல்வாதிகள் தேர்தலுக்கு மட்டும் வருகின்றார்கள் அதன் பின்பு அவர்களை காணவில்லை.

கந்தளாய் பகுதியில் வடிகால்கள் இல்லாத காரணத்தினால் நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

“அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறிய போதும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை” என மேலும் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியாவில்,

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் அடை மழை காரணமாக அங்குள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று ஆரம்பித்த அடை மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.

கிண்ணியா அல் அதான் பாடசாலை வளாகத்தினுள்ளும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதால் பல அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

அடை மழை காரணமாக கிண்ணியாவில் உள்ள பிரதான வீதிகள், வடிகான்கள் நீர் நிரம்பி காணப்படுவதனால் போக்குவரத்தும் தடைப்பட்டும் காணப்படுகிறது.

குறித்த காலநிலை காரணமாக இன்றைய தீபாவளி பண்டிகை நாளிலும் கூட கிண்ணியா பிரதேச பகுதி வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers