மலேசியாவில் சித்ரவதைக்குள்ளான தமிழ் தொழிலாளர்கள் மீட்பு?

Report Print Murali Murali in சமூகம்

தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு தொழிலுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு சித்ரவதைக்கு உள்ளாவதாக கோரிக்கை விடுத்திருந்த 48 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அந்த தொழிலாளர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர்.

ஒரு நபரால் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் முறையிடும் வாடஸ் அப் வீடியோ ஒன்று சில தினங்களுக்கு சமூக ஊடகங்களில் பரவியது.

அதில், “ஒரு மாத சம்பளம் கொடுத்தார்கள், இரண்டாவது… மூன்றாவது மாதம் சம்பளம் கேட்டால் அடிப்போம் என்று சொல்கிறார்கள்.

கடவுச் சீட்டு எங்கள் கையில் இருக்கிறது என மிரட்டுகிறார்கள். 48 பேரும் காட்டுக்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் மாட்டிக்கொண்டிருப்பதை வீட்டுக்குக்கூட சொல்ல முடியாத நிலைமை” எனக் கூறியுள்ளனர்.

தாங்கள் உயிரோடு ஊர் திரும்ப உதவிமாறு கோரியிருந்த அவர்கள், “வெளிநாடு என நம்பி வந்து ஏமாந்துட்டோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

சம்பளம், உணவு எதையும் முறையாக கொடுக்காமல் சித்ரவதை செய்வதாகவும் வேலையை முடிக்காமல் சென்றால் கொன்று தான் வீட்டுக்கு அனுப்புவோம் என மிரட்டியதாகவும் அந்த வாடஸ் அப் வீடியோவில் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மற்றொரு வீடியோவில் மலேசிய சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ தெரிவித்துள்ளார்.

“மலேசிய மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன் உதவியுடன் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் நன்றாக உள்ளனர். அவர்களுடைய பாதுகாப்புக்கு நான் பொறுப்பேற்றுள்ளேன்” என கூறியிருக்கும் காமாட்சி துரைராஜூ, தொழிலாளர்களின் கோரிக்கை வீடியோவை இனியும் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், அவர்கள் அனைவரும் விரைவில் இந்தியாவுக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Latest Offers