யானை தாக்குதலில் மோட்டார் சைக்கிள் சேதம்: விவசாயி தப்பி ஓட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யானைதாக்கியதில் விவசாயி ஒருவர் உயிர் தப்பியுள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் சேதமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை - இளமருதங்குளம் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தனது வயலினை பார்வையிடுவதற்காக குறித்த விவசாயி சென்றுள்ளார்.

இதன்போது அங்கு இருந்த காட்டு யானை குறித்த விவசாயி வருவதை அவதானித்துள்ளதுடன் அவரை துரத்திச் சென்று தாக்க முற்பட்டுள்ளது. சம்பவத்தினை உணர்ந்து கொண்ட விவசாயி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் அயலவர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் கைவிட்டு சென்ற பாவனையில் இருந்த தனது மோட்டார் சைக்கிளினை தேடிச் சென்ற போது மோட்டார் சைக்கிள் யானையின் தாக்குதலில் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் யானைக்கான மின்சார பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தும் குறித்த யானை மின்சார வேலிக்கு அமைக்கப்பட்ட வாசல் பகுதியால் வயலுக்கு வந்துள்ளது.

எனினும், குறித்த வாசல்பகுதியில் காவலாளி காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.