பாதுகாப்பான போக்குவரத்திற்கு நிரந்தர பாலமே தீர்வாகும்

Report Print Nesan Nesan in சமூகம்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் மழை காரணமாக கல்முனை - நாவிதன்வெளியை இணைக்கும் கிட்டங்கி வாவியை ஊடறுத்துச்செல்லும் பிரதான பாதையினூடாக வெள்ளநீர் வழிந்தோடுவனதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டங்கி பிரதான வீதியில் 2 அடிக்கு மேல் நீர் பரவி வருவதாகவும், போக்குவரத்துக்கு இன்றுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை, இருப்பினும் மழைவீழ்ச்சி தொடருமாயின் நாவிதன்வெளி பிரதேசத்திற்கும் கல்முனை நகருக்குமான தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்படும்.

இதனால் விவசாயத்தை நம்பியிருக்கும் நாவிதன்வெளி பிரதேசவாசிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய கல்முனை நகருக்கு எடுத்துச்செல்ல முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படும் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நிதந்தர பாலம் அமைக்கப்படாமல் இருப்பதனால் தொடர்ந்தும் கூடுதல் மழைவீழ்ச்சி பதிவாகினால் நான்கு அடிக்கு மேல் வீதியினூடாக வெள்ளநீர் செல்லும்.

இவ்வாறான நேரங்களில் வீதியை கடப்போர் வெள்ள நீரினால் இழுத்துச் செல்லப்படுவதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம் ஒன்பது பேர் வெள்ளத்தில் சிக்குண்டு மரணமடைந்துள்ளதோடு பலர் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு பின் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிராமசேவையாளர் பிரிவிலுள்ள மக்களின் ஜீவனோபாயத்திற்கும் பாதுகாப்பான போக்குவரத்திற்கும் நிரந்தர பாலமே உத்தரவாதமாக அமையுமென பிரதேச மக்கள் இதன் போது தெரிவித்திருந்தனர்.