வவுனியா - சமனங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக மக்கள் விசனமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த திணைக்களத்தினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தொல்பொருள் அகழ்வுகள் சம்பந்தமான வேலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா - சமனங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் கடந்த 1952ம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களினால் வழிபாடு செய்யப்பட்டு வந்துள்ளது.
இதே வேளை இந்த கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற்தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டடங்கள் என பல காணப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களிற்கு முன்னால் தொல்பொருள் திணைக்களத்தினால் கல், மணல் மற்றும் பல கட்டடபொருட்கள் இவ்வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கையில்,
இவ்வாலயத்தில் நாம் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வருகின்றோம். ஆனால் தற்போது இவ்வாலயம் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தம் என்ற ரீதியில் புத்தர் சிலையினை ஸ்தாபிக்க முயல்வதாக தெரிவித்திருந்தனர்.
இதேவேளை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இது தொடர்பாக அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடனும் இது தொடர்பாக தொலைபேசியில் கலந்துரையாடி இருந்ததுடன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகவல் அறிந்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் ஆலய பரிபாலனசபையினர் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
பின்னர் விசாரணைகளின் அடிப்படையில் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இது தொடர்பாக தொல்பொருள் திணைக்கள பிராந்திய முகாமையாளரிடம் கேட்கப்பட்டபோது,
குறித்த இடம் அனுராதபுரம் காலத்து புராதன சின்னங்களாகும். இவை அழியாமல் தடுப்பதற்காக இச்சின்னங்களை புனரமைக்கும் செயற்பாட்டினை செய்வதாக கூறியிருந்தார்.