மத்திய வங்கி குண்டு வெடிப்பு! விடுதலைப் புலி உறுப்பினர்களின் மனு நிராகரிப்பு

Report Print Murali Murali in சமூகம்

மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜயசுந்தர மற்றும் அச்சல வேங்கபுலி ஆகியோரின் தலைமையிலான நீதியரசர் குழாமினால் இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

72க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மூவருக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 வருடங்கள் சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி குறித்த மூவரும் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுக்காமலே மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான விக்கினேஸ்வரநாதன் பத்திரன், கதிராகுமனம் சிவகுமார் மற்றும் செல்வகுமார் நர்மதன் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டிருந்தார். மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பிலான வழக்கு அதிக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கும் கொழும்பு மேல்நீதிமன்றம் 2002 ஒக்டோபர் மாதம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.