வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்களுக்காக இராணுவ படகுச்சேவை

Report Print Rusath in சமூகம்

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக நேற்று வரை 1958 குடும்பங்களைச் சேர்ந்த 6571 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

தங்களது வாழிடங்களில் நீர் தேங்கி நிற்பதால் 541 குடும்பங்களைச் சேர்ந்த 1887 இடம்பெயர்ந்து 5 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலயம், ஊரியன் கட்டு அரச தமிழ் கலவன் பாடசாலை, கட்டுமுறிவு அரச தமிழ் கலவன் பாடசாலை, வம்பிவெட்டுவான் அரச தமிழ் கலவன் பாடசாலை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலயம் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வாகரைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாகச் சென்று இடம்பெயர்ந்தவர்களின் சேமநலன்கள் பற்றிக் கேட்டறிந்தார்.

கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தொப்பிகல பிரதான வீதிப்போக்கு வரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதை அடுத்து இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயந்திரப்படகுச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் கிண்ணையடி மற்றும் பிரம்படித்தீவுகளுக்கிடையே படகுச்சேவை நடைபெற்றுவருகிறது.

இதேவேளை மினுமினுத்தான்வெளி மற்றும் அக்குறாணை ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளதனால் சுமார் 250 குடும்பங்கள் சிக்கியுள்ளதாக கிரான் பிரதேச செயலாளர் எஸ் ராஜ்பாபு தெரிவித்தார்.

வடமுனை மற்றும் ஊத்துச்சேனை ஆகிய பிரதேசங்களும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் கூறினார்.

சித்தாண்டி ஈரளக்குளம் வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் ஏறாவூர்ப்பற்று பிரதே செயலகத்தினால் இயந்திரப் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Latest Offers