2 வருடங்களின் பின் கொள்ளளவை அடைந்த இரணைமடு குளம்

Report Print Dias Dias in சமூகம்

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர் கடந்த 2 வருடங்களின் பின் அதன் கொள்ளளவை அடைந்து வருகிறது என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் ந.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“கடந்த 24 மணி நேரத்தில் பெய்த 150 மில்லி மீற்றர் மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக இரணைமடுக் குளத்தின் நீரேந்து பகுதிகளில் அதிகளவு மழை காரணமாக நேற்றுக் குளத்தின் நீர் மட்டம் 28 அடியாக உயர்ந்துள்ளது.

மாங்குளம், கனகராயன்குளம், சேமமடுக்குளம் போன்ற குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் அந்தக் குளங்கள் வான் பாய்கின்ற போதும் இரணைமடு குளத்திற்கான நீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையிலும் பருவ மழை போதுமானதாக இல்லாததன் காரணமாக கடந்த வருடங்களில் நீர் மட்டம் அதன் கொள்ளளவை அடையவில்லை.

2016 ஆம் ஆண்டு நீர் மட்டம் 20 அடியாகவும், 2017 ஆம் 18 அடியாகவும் காணப்பட்டது. இரணைமடுக் குளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது.

அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது. இதுவரை காலமும் 106,500 ஏக்கர் அடியாக (131 எம்.சி.எம்) காணப்பட்ட நீர் கொள்ளளவு தற்போது 119, 500 ஏக்கர் அடியாக(147 எம்.சி.எம்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயரும் போது குளம் இந்த கொள்ளளவை அடையும். இன்னமும் வட கீழ் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பிக்கப்படவில்லை.

தற்போது இடையீட்டுப் பருவப்பெயர்ச்சி மழையே பெய்து வருகிறது. நவம்பர் மாதம் அதிக மழையும், டிசெம்பர் மாதம் குறைவான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரணைமடுக் குளம் இவ்வருடம் 36 அடி நீரை எட்டும் என்ற நம்பிக்கையுண்டு.

அவ்வாறு 36 அடிக்கு நீர் வந்தால் இதுவரை காலமும் இரணைமடுக் குளத்தின் கீழ் சராசரி 8500 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோக நெற்செய்கை 12,500 ஏக்கராக மாற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

Latest Offers