முல்லைத்தீவில் பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பல்லி

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட 36 மாணவர்கள் மாங்குளம் மற்றும் மல்லாவி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு - துணுக்காய், வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று மதியம் வழங்கப்பட்ட மதிய உணவினை பெற்றுக்கொண்ட மாணவி ஒருவரின் சாப்பாட்டுக்கோப்பைக்குள் உயிரிழந்த நிலையில் முழுமையான பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

இதையடுத்து மதிய உணவினை உட்கொண்ட 36 மாணவர்களும் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இடவசதி பற்றாக்குறை காரணமாக 16 மாணவர்கள் மல்லாவி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மாங்குளம் வைத்தியசாலை அதிகாரியை தொடர்பு கொண்டு வினவிய போது,

“குறித்த பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் உயிரிழந்த பல்லி காணப்பட்ட நிலையில், உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதில் 16 மாணவர்களை மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களில் எவ்வித வித்தியாசங்களும் காணப்படவில்லை” என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளரை தொடர்புகொண்டு வினவிய போது,

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை உதவிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி உத்தியோகத்தர்களுடன் சென்று பார்வையிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உணவு பரிமாறும் இடத்தில் தான் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும்” என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers