ஒரே தினத்தில் வரும் இரு முக்கிய பரீட்சைகள்! குழப்பத்தில் ஆசிரியர்கள்

Report Print Kaviyan in சமூகம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப்பட்டப்படிப்பு மாணவர்களுக்கான பரீட்சைகளும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் பலர் க.பொ.சாதாரண தரப் பரீட்சைக் கடமைகளுக்குச் செல்லவுள்ளமையால் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நடாத்தப்படும் வெளிவாரிப் பட்டப்படிப்புக்குரிய பரீட்சையில் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உரிய பொறுப்புவாய்ந்தவர்கள் கவனம் செலுத்தி ஆவன செய்யுமாறு பாதிக்கப்படப் போகும் பலரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ள நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கான பரீட்சைகளும் எதிர்வரும் டிசம்பர் 02ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.

மேற்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப்பட்டப்படிப்பை மேற்கொள்பவர்களில் பலர் ஆசிரியர்களாகக் காணப்படுகின்றார்கள்.

அவர்களில் பலர் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக் கடமைகளுக்குச் செல்பவர்களாகக் காணப்படுகின்றனர்.

இரண்டு பரீட்சைகளும் ஒரே காலப்பகுதியில் நடைபெறவுள்ளமையால் பரீட்சைக் கடமைகளுக்குச் செல்வதா? பரீட்சைக்குத் தோற்றுவதா? என்ற குழப்ப நிலையில் பல ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள்.

இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக் கடமைகளுக்குச் செல்லவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புப் பரீட்சார்த்திகளான ஆசிரியர்கள் தமது பரீட்சைக்குப் படித்து தயாராகுவதற்கான சந்தர்ப்பங்களும் குறைவாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers