திருகோணமலையில் யாசகர் ஒருவர் செய்த கொடூரமான செயல்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை பகுதியில் யாசகர் ஒருவர் மேற்கொண்ட கோடரி வெட்டுத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை - இறக்ககண்டி பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த யாசகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இறக்க கண்டி நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த அபூபக்கர் சம்சுதீன் ( 50 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவரது மனைவியான இஸ்மாயில் பரீனா (45 வயது) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய உடப்பு, சிலாபம், கீரியங்கல பகுதியைச் சேர்ந்த நூர் லெப்பை பாரூக் ( 65வயது) கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முந்தல் பகுதியில் உள்ள குறித்த நபர் திருகோணமலைக்கு யாசகம் கேட்டு வருவதாகவும், அவருக்கு இரண்டு மாதங்களாக உணவு வழங்கி வந்ததாகவும் நேற்றிரவு குறித்த யாசகர் வீட்டுக்கு வந்து கணவனையும், மனைவியையும் கோடரியால் தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.

Latest Offers