நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ள மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறித்த மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் நாளைய தினமே மன்னார் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாகவும் அகழ்வுப் பணிகளை கண்காணிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக வாதிடும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“பலத்த மழை காரணமாகவும், அரச பணி காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தன.

பணிகள் இடை நிறுத்தப்படும் வரை 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும், 230 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டும் இருந்தது.

இந்த நேரத்தில் இவ் அகழ்வுப் பணியை காணாமல் போனோர் அலுவலகமும் இணைந்து செய்து கொண்டிருக்கின்றது.

அரசியல் மாற்றங்கள் காரணமாக எந்தவித பாதிப்புக்களும் இவ் அலுவலகத்தால் அகழ்வு பணிக்கு காணப்படவில்லை. இவ் அகழ்வு பணி நாளைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

குறித்த மனித புதை குழி தொடர்பான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் அழைக்கப்பட இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Latest Offers