பணத்தை வாங்கிக் கொண்டு மாடுகளை மேய விடாதே - மக்கள் போராட்டம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - புணாணை பிரதேச விவசாயிகளின் வயல் நிலங்களை கட்டாக்காளி மாடுகள் சேதப்படுத்துவதை தடுக்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் விவசாயிகள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட புணாணை, இலுக்குவட்டை, குளத்துவட்டை, மயிலந்தன்னை, பொத்தானை உட்பட்ட விவசாயிகளின் விவசாய செய்கையை கட்டாக்காளி மாடுகள் சேதப்படுத்தி வருகின்றது.

புணாணைக்கு உட்பட்ட பகுதிகளில் 450 ஏக்கர் பெரும்போக விவசாய நிலங்களில் விவசாயிகள் மழையை நம்பி விவசாயம் செய்து வரும் நிலையில் வெளிமாவட்டம் மற்றும் உள்ளூர் மாவட்ட பிரதேச வாசிகளின் மாடுகள் வயலுக்குள் செல்வதால் வேளான்மை பாதிக்கப்படுகின்றது.

அத்தோடு கட்டாக்காளி மாடுகளை துரத்திச் செல்லும் போது இரவு நேரங்களில் யானைகள் விவசாயிகளை துரத்தும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது. இதனால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இதனை தடுக்குமாறு கோரி விவசாயிகள் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் இருந்து 100 மீற்றர் தூரம் வரை நடந்து சென்று பின்னர் புணாணை வனஇலாகா அலுவலகத்திற்கு முன்பாக வீதியில் ஒரு பக்கத்தை மறைத்து, அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

மேலும் பணத்தை வாங்கிக் கொண்டு கட்டாக்காளி மாடுகளை மேய விடாதே, அடிக்காதே அடிக்காதே விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே என்ற கோசங்களை எழுப்பியவாறும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறித்த மாடுகள் தொடர்பாக உரிமையாளர்களுடன் உரையாடும் போது அவர்கள் தங்களை தாக்க முற்படுவதாகவும், இவ்விடயம் தொடர்பில் பல்வேறு அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித பயனும் இல்லை என அவர்கள் இதன் போது தெரிவித்திருந்தனர்.

எனவே மூவின மக்களும் இணைந்து இங்கு விவசாயம் செய்து வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களின், நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க முன்வருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

குறித்த விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட புணாணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவார காலத்திற்குள் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி கால்நடைகளை விவசாய பகுதிகளுக்கு வராத வகையில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கியதையடுத்து விவசாயிகள் குறித்த போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.

Latest Offers