சந்தேகநபர்களுக்கு உதவியவர்களுக்கு ஏற்பட்ட நிலை

Report Print Mubarak in சமூகம்

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களுக்கு நாட்டை விட்டுச் செல்ல உதவிய மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களை நாட்டை விட்டுச் செல்லுவதற்கு உடந்தையாக இருந்த மூவரை அடுத்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 34, 26, மற்றும் 42 வயதுடைய மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கடலூர் பகுதியில் இம்மாதம் 5ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் மகள் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண் கேணியடியில் வசித்துவரும் யோகராஜா யோக அம்பிகை ​(வயது 68) எனவும் வெட்டுக் காயங்களுக்குள்ளான மகள் யோகராஜா ரத்னகுமாரி (வயது 45) எனவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணும் அவரது மகளும் அவர்களது வீட்டின் அறையினுள் உறங்கிக்கொண்டிருந்த போது தாயின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதோடு அவரது மகளையும் சந்தேகநபர்கள் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பணம் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனரென பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கொலை செய்யப்பட்டவரின் மகன் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதாகவும் அதனை கொண்டு தாய் அப்பகுதியில் வட்டி வியாபாரம் செய்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

குறித்த கொலை சம்பவத்தினை தொடர்ந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்ட திருகோணமலை தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸார் பிரதான சந்தேகநபர்கள் பயன்படுத்திய கையடக்க தொலைபேசியை கைப்பற்றி அதன் மூலம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடல்மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு உடந்தையாக செயற்பட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers