என்ன நடந்தாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் : சிவாஜிலிங்கம்

Report Print Dias Dias in சமூகம்

எந்த விதமான அடக்கு முறை வந்தாலும் மக்களுக்கான பணி, மாவீரர்களுக்கான பணி தொடரும் எனவும், நாளைய தினம் எல்லா இடங்களிலும் மக்கள் மாவீரர் தினத்தை கொண்டாட வேண்டும் என வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய பிறந்ததினத்தை கொண்டாட முற்பட்ட போது வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை - இனுவில் பொதுப்பூங்காவில் உள்ள மாவீரர்களான குமாரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று கைது செய்யப்பட்டு இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2011ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்ட பயக்கரவாத தடைச்சட்டத்தின் படி தமிழீழ விடுதலை புலிகளையோ அல்லது அவர்களது நடவடிக்கைகளையோ நினைவு கூற முடியாது.

இதனால் பொருட்களை பறிமுதல் செய்கின்றோம், மேலதிக நடவடிக்கைகள் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுவோம் என்று பொலிஸார் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், இறந்தவர்களுக்கு மிகவும் அமைதியான முறையில் விளக்கேற்றி மரியாதை அளிப்பதை நீங்கள் தடுக்க கூடாது என்று நாங்கள் கூறியிருந்தோம்.

அதற்கு அவர்கள், நீங்கள் சமாதானமான முறையில் வழி விடாவிட்டால் நாங்கள் எதிலும் தலையிடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தார்.

பிரபாகரனுடைய பிறந்த நாளுக்காக தயாரிக்கப்பட்ட சுவரொட்டியில் தமிழ் தேசிய இனத்தின் தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்ததினம், தமிழ் மண் காப்போம், தாயகம் காப்போம், தமிழர்களின் தாயகம் தமிழீழ தாயகம் என்பதை குறிப்பிட்டிருந்தோம்.

பொலிஸார் எங்களை கைது செய்யும் போது குறித்த சுவரொட்டியையும், கேக் மற்றும் பொருட்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.

ஆனால் எந்த விதமான அடக்கு முறை வந்தாலும் மக்களுக்கான பணி, மாவீரர்களுக்கான பணி தொடரும் எனவும், நாளைய தினம் எல்லா இடங்களிலும் மக்கள் மாவீரர் தினத்தை கொண்டாட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

நாளை காளை 9 மணிக்கு நல்லூரில் தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாகவும், கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாகவும், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாகவும், வடமராட்சியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாகவும் மாவீரர்தின நிகழ்வுகள் நடைபெறும் எனவும் மாலை எங்கு நடைபெறும் என்பதை பின்னர் நாங்கள் அறியத்தருவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

எந்த நிபந்தனையில் உங்களை விடுதலை செய்தார்கள் என சிவாஜிலிங்கத்திடம் ஊடகவியலாளர் வினவிய போது,

குறித்த சட்டத்தின் கீழ் பொருட்களை பறிமுதல் செய்திருக்கின்றோம், மேலதிக நடவடிக்கைகள் பற்றி உங்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவோம் என்றும் பொலிஸார் கூறியிருந்தார்கள்.

அத்தோடு குறித்த பிரச்சினை பெரும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதாலோ விடுதலை செய்திருக்கலாம். ஆனால் என்ன நடந்தாலும் அதன் விளைவுகள் அனைத்தையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.

Latest Offers