சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் ஆரம்பம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் மார்கழி மாதம் 22ஆம் திகதி பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாத மலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.

நல்லதண்ணி நகர கிராம சேவகர் காரியாலயத்தின், கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஒன்றுகூடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நாயக்க தேரர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வருடத்திற்கான சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனி சுபவேளையில் புறப்படவுள்ளது.

குறித்த பவனி பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாத மலையின் அடிவாரத்தினை வந்தடைவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

மற்றைய ஊர்வலம் இரத்தினபுரி - அவிசாவளை வீதியினூடாக பயணித்து ஹட்டன் - நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாத மலைக்கும், இரத்தினபுரி - பலாபத்தல வீதி ஊடாக பிறிதொரு ஊர்வலமும் பயணிக்கவுள்ளது.


பெல்மடுல்ல - ஓப்பநாயக்க, பலாங்கொட, பின்னவல, பொகவந்தலாவ ஊடாக தெய்வீக ஆபரணங்களை ஏந்திய மூன்றாவது ஊர்வலம் சிவனொளிபாத மலையை சென்றடையவுள்ளது.

அத்துடன் சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின் 22ஆம் திகதி அதிகாலை நடைபெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து 2018 – 2019ஆம் வருடத்திற்கான சிவனொளிபாத மலை யாத்திரைப் பருவகாலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.


குறித்த யாத்திரை காலப்பகுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும், யாத்திரிகர்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


குறித்த ஒன்று கூடலின் போது நாயக்க தேரரால் அழைக்கப்பட்ட பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், வன பாதுகாப்பு பரிபாலன அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மின்சார சபை உயர் அதிகாரி, இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகள், விசேட அதிரடி பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Latest Offers