பெண் கைதியை தாக்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Manju in சமூகம்

பக்கத்து வீட்டுப் பெண்ணை கத்தியால் தாக்கி காயமேற்படுத்தியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண்ணை போகம்பர சிறைச்சாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மிருகத்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட பெண்ணின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்துமாறும் 50 ஆயிரம் ரூபா நீதிமன்றக் கட்டணம் செலுத்துமாறும் அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு 5 லட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறு சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும், பெண் சிறைக்காவலர்கள் 4 பேருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்ட அதிகாரி எம்.எம் ஏக்க நாயக்க என்பவர் தற்போது மாத்தளை சிறைச்சாலை அதிகாரியாக பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்றும் பெண்கள் சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு 75 ஆயிரம் படி இழப்பீடு செலுத்துமாறும் அவர்களின் சொந்தப் பணத்தில் செலுத்துமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாத்தளை கயிக்காவல பிரதேசத்தைச் சேர்ந்த நந்தனி குமாரி என்ற பெண்ணால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2008 ஜூன் மாதம் 27ம் திகதி நந்தனி குமாரி என்ற பெண் பத்மா குமாரி என்ற பெண்ணை அவரது வீட்டுக்கு அருகில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

பத்மா குமாரி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கமைய நந்தனி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பத்மா குமாரி ஏக்கநாயக்க என்ற பெண் மாத்தளை சிறைச்சாலை அதிகாரியின் மனைவி என தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுக்கு அருகில் குவிக்கப்பட்டுக் கிடந்த குப்பை தொடர்பாக குறித்த பெண்கள் இருவருக்கும் மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தப்பட்ட நந்தனி குமாரி பிணை மறுக்கப்பட்டு, மாத்தளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டடு, பின்னர் போகம்பர சிறைச்சலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடம்பில் 5 இடத்தில் காயங்கள் காணப்பட்டதாகவும் ஒரு காயம் பாரதூரமாக காணப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers