பொலிஸார் எதேச்சையான நடவடிக்கைளில் ஈடுபடுவதாக எழும் அவநம்பிக்கைகளையும் களைந்தெறிய வேண்டும்

Report Print Rusath in சமூகம்

இனங்களுக்கிடையில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் சிறு விஷமத்தனங்களும் பெருந்தீயாகப் பரவி அழிவுகளையும் ஆபத்துக்களையும் உருவாக்கும் விஷச் சூழலைத் தவிர்ப்பதே மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களினதும் மாவட்ட சர்வ மதப் பேரவையினதும் நோக்கம் என ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் சட்டத்தரணி ஸாஜஹான் றொஷான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சமாதான செயற்பாடுகள் பற்றி மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிகள் ஆகியோருக்கிடையில் தெளிவுபடுத்தும் கொள்கை ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர் ( Celina Cramer – Program Officer for Peacebuilding and Community Dialog) இக்குழு முயற்சிக்கான சமூக ஒருங்கிணைப்பு (Group Action for Social Order) அமைப்பின் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்தாத் உட்பட பொலிஸ் அலுவலர்கள், மட்டக்களப்பு மாவட்ட சரவமதப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் செயற்பாடுகளைப் பற்றியும் அதனோடு மாவட்ட சர்வமதப் பேரவை இணைந்து பணியாற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் பற்றி விவரங்கள் பற்றியும் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் எதேச்சையான நடவடிக்கைளில் ஈடுபடுவதாக எழும் அவநம்பிக்கைகளையும் களைந்தெறிய வேண்டும். ஏனெனில், இத்தகைய அவநம்பிக்கைகளாலும் பல்வேறு பிரச்சினைகள் புதிதாக உருவாகின்றன.

இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படுத்தப்படுகின்ற போது எவ்வாறு பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு சுமுக நிலையை உருவாக்கலாம் என்பது பற்றிச் சிந்திப்பதற்கு இத்தகைய பொலிஸ் ஆலோசனைக் குழு, சர்வமதப் பேரவை உட்பட இதுபோன்ற அமைப்புக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புக்கள் மிக அவசியமாகும்.

விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்று அதன் பிறகு இழப்பீடுகளும், பரிகாரங்களும் தேடுவதை விட குழப்பங்கள் இடம்பெறாமல் வருமுன் தடுப்பதே மேலானதாகும்.

பிரதேசங்களில் நிகழும் பல்வேறுவகைப்பட்ட வன்முறைகள், சட்டமீறல்கள், குற்றச் செயல்கள், முரண்பாடுகள் மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகளை சாதகமான வழிமுறையில் கையாளும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே பொலிஸ் ஆலோசனைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவை தற்போது இயங்கி வருகின்றன.

பொலிஸ் பொது மக்கள் உறவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். சமூக வன்முறைகளை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைத்து அமைதியையும் அழிவையும் தோற்றுவிக்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்க வேண்டும்.

இந்தப் பொறுப்பு பொலிஸாருக்கு மட்டும் உரியதல்ல. இதில் ஒட்டு மொத்த சமூகமுமே தம்மை அர்ப்பணித்துப் பணியாற்ற வேண்டும். பொலிஸ் ஆலோசனைக் குழு வெறுமனே இனமுறுகலைத் தணிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் உருவாக்கப்பட்டதொன்றல்ல.

அது அந்தந்தப் பிரதேசங்கிளல் சட்டமும் ஒழுங்கும், பாதுகாப்பு, இயல்பு வாழ்க்கை, உட்பட இன்னோரன்ன சிறப்பான நிருவாகத்தை முன்னெடுப்பதற்கு உதவுவதற்கேயாகும்.

பொலிஸாரின் நடவடிக்கைகளை மக்களுக்கு விருப்பமுள்ளதாக எவ்வாறு மாற்றியமைத்துக் கொண்டு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் சிவில் சமூகம் எவ்வாறு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசனைகளை முன்வைப்பது பிரதான நோக்கமாகும்.

கைது நடவடிக்கை, புலனாய்வு, குற்றப் பரிசோதனை இதுபோன்ற பொலிஸாரின் நடவடிக்கைகளின்போது சமூக இயல்பு நிலையும் இன ஒற்றுமையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையாக இருக்கின்றது.

அந்த வகையில் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொருத்தப்பாடான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த ஆலோசனைக் குழுக்கள் உதவுகின்றன.

Latest Offers