கிளிநொச்சி பொதுச் சந்தைக்குள் சுகாதார சீர்கேடுகள்! வர்த்தகர்கள் விசனம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி, பொதுச் சந்தைக்குள் மனிதர்கள் செல்ல முடியாத அளவுக்கு சில பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவதாக சந்தை வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதற்கு கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், இன்றைய தினம் அதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி சந்தையின் பழக்கடைத் தொகுதிக்கும், மரக்கறிக்கடை தொகுதிக்கும் இடையே உள்ள பகுதி மிகவும் மோசமான சுகாதார சீர்கேடுகள் நிறைந்த பகுதியாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் அக்கறை செலுத்தவில்லை. மாதாந்தம் 1240 ரூபாய் ஒவ்வொரு வர்த்தகர்களிடமிருந்தும் அறவிடுகின்றனர். ஆனால், அதற்குரிய சேவை இடம்பெறுவதில்லை என சந்தை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கழிவகற்றல் மற்றும் இவ்வாறான சுகாதார சீர்கேடுகள் தொடர்பில் பிரதேச சபையின் கவனத்திற் கொண்டு சென்றால் சில நாட்களுக்கு தொடர்ந்தும் பணிகளை மேற்கொள்கின்றனர். மறுபடியும் பழைய நிலைக்கு சென்றுவிடுகின்றனர் நாங்களும் ஒவ்வொரு தடவையும் இவ்வாறு கூறிக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதனிடம் வினவிய போது,

குறித்த விடயம் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம், குறித்த பகுதிக்கு கொங்றீட் இட்டு நிரந்தரமாக செப்பணிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.