மட்டக்களப்பு மக்களைச் சந்தித்த அரசாங்க அதிபர்!

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு கிராமத்திற்கு விஜயம் செய்த அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், அப்பிரதேச மக்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன், தீர்வுகளை வழங்குவதற்கான நடவக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.

ஓமடியாமடுவில் அமைந்துள்ள பல்தேவைக் கட்டடத்தில் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுனின் ஏற்பாட்டில், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கமநல அமைப்புப் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இச் சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பின்போது போக்குவரத்து வசதிகள் குறைவாகக் காணப்படும் தமது பிரதேசத்தின் பிரதான பாதையான ரிதிதன்ன - ஓமடியாமடு வீதி நீண்ட காலமாக சேதமடைந்து காணப்படுவதாகவும், அவ்வீதியினால் போக்குவரத்து மேற்கொள்வதில் தமக்குள்ள சிரமத்தினை தீர்த்து வைக்குமாறு ஓமடியாமடு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன்போது, ஓமடியாமடு மக்களுக்கு பதிலளித்த அரசாங்க அதிபர் மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான அவ்வீதியினை அதிகார சபையுடன் கலந்துரையாடி அவ் வீதியைத் திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.

அத்துடன் தமது பிரதேசத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மருத்துவ வசதி வழங்கல் சீராக நடைபெறுவதில்லை என்றும், இதனால் நோய்கள் ஏற்படுகின்ற வேளையில் பொலன்னறுவை அல்லது வாழைச்சேனை வைத்தியசாலைகளுக்கு செல்வதற்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் மக்கள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மருத்துவப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று சமுர்த்தி வழங்கல், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் காணப்படுவதாகவும் மக்கள் அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்

மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான ஓமடியாமடு பிரதேசத்திற்கு அரசாங்க அதிபர் வருகை தந்து தங்களது பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து கொண்டமை குறித்து அக்கிராம மக்கள் அரசாங்க அதிபருக்கு நன்றி தெரிவித்ததுடன், தங்களது மகிழ்ச்சியினையும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.