வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீள் திறப்பதற்கு சாதகமான தீர்வு கிடைக்கும்

Report Print Theesan in சமூகம்

வவுனியா வர்த்தகர் சங்கம் பேருந்து நிலையத்தை மீள் திறப்பதற்கு சாதகமான தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை மீள் திறப்பது குறித்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வர்த்தக சங்கத்தினருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பினையடுத்து இம் மாதம் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு சுமூகமான ஒரு தீர்வு கிடைக்கும் என்று வர்த்தகர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வர்த்தகர் சங்க செயலாளர் ஆ.அம்பிகைபாகன் மேலும் தெரிவிக்கும்போது,

இன்றைய தினம் கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகிய முற்தரப்பினருடன் குறித்த பேருந்து நிலையத்தினை மீளத்திறப்பது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலில் சாதகமான பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.

வர்த்தகர் சங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பொது அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச்சங்கம், வர்த்தகர்கள், கமக்கார அமைப்புக்கள், பாடசாலை சமூகத்தினரின் மகஜர்கள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி யாழப்பாணத்திலுள்ள ஆளுநரின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதையடுத்து ஆளுநர் நேரடியாக பேருந்து நிலையத்திற்கு சென்று, நிலைமைகளை பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இன்றைய சந்திப்பில் எங்களிடம் உறுதியளித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் பழைய பேருந்து நிலையத்தை மீள் திறப்பதற்குரிய நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர் சங்க செயலாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Latest Offers