வவுணதீவில் பொலிஸார் இருவர் கொடூரமாக கொலை! முன்னாள் போராளிகளிடம் தீவிர விசாரணை

Report Print Murali Murali in சமூகம்

மட்டக்களப்பு - வவுணதீவில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் போராளிகள் பலரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்த விசாரணைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் சென்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேடுதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகளின் பட்டியலிலுள்ள பெயர்களைக் கொண்டவர்கள், தற்போது வதியும் அல்லது தொழில் புரியும் இடங்களின் சரியான விவரங்களை அதிரடிப்படையினர் திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, மட்டக்களப்பு வவுணதீவு வாவியிலும் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸார் இருவரும் கொலை செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் காணாமல் போனதையடுத்து, இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு - வவுணதீவில் பொலிஸார் இருவர் குத்தியும், வெட்டியும், சுட்டும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.