1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொள்ள வீதி வீதியாக இறங்கி போராட வேண்டிய நிலை

Report Print Thirumal Thirumal in சமூகம்

மலையகத்தின் பல பகுதிகளில் இன்று தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

தமக்கு 1000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் வரையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தோட்ட தொழிற்சாலைகளுக்கு முன்னால் கூடிய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1000 ரூபா சம்பளம் கோரி கடந்த பல மாதங்களாக தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் 1000 ரூபா சம்பளத்தை வழங்க இணக்கம் எட்டப்படாத நிலையில் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தோட்டத் தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.

பல பகுதிகளில் போராட்டத்தை ஆரம்பித்த தோட்டத் தொழிலாளர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டதுடன், டயர்களையும் எரித்து எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு வீதி வீதியாக இறங்கி போராட வேண்டிய நிலை உள்ளது. இதனை பேசி தீர்க்க வேண்டிய தொழிற்சங்கங்கள் எம்மை போராடுவதற்கு வீதியில் இறக்குகின்றன.

அவ்வாறு போராட வேண்டுமென்றால் எதற்காக இவர்களுக்கு சந்தா பணம் செலுத்த வேண்டும். மலையகத்திலிருந்து நாடாளுமன்றம் சென்றவர்கள் இதுவரை எந்தவித தீர்வினையும் எமக்கு பெற்றுத் தராது, தமது பதவியை மாத்திரம் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றதாக தெரிவித்துள்ளனர்.

Latest Offers