பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிராக ஓட்டமாவடியில் எதிர்ப்பு பேரணி!

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிராக ஓட்டமாவடியில் எதிர்ப்பு பேரணி இன்று இடம்பெற்றுள்ளது.

அண்மையில் வவுணதீவில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இச் செயலை கண்டித்து ஓட்டமாவடியில் உள்ள அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த எதிர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது.

இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கும் சாத்தியம் உள்ளது. மீண்டும் நாம் சந்தோசங்களை தொலைத்து அபாயம் சூழ்ந்து அச்சத்துடன் வாழும் நிலையை உருவாக்கும் வகையிலேயே இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலைப் புலியில் இருந்து புனர்வாழ்வு பெற்ற இன்பராசா என்பவர் முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பரப்பிய செய்தி எவ்வளவு பொய்யானது என்பதை நிரூபிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவமானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

'டயஸ்போறா' மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற விசம சக்திகள் எமது இலங்கை திருநாட்டை மீண்டும் போர்க்காடாக மாற்ற முனைகின்றனர்.

அண்மையில் இன்பராசா வெளியிட்ட கருத்துக் கூட அரசாங்கத்தின் கவனத்தை முஸ்லிம்களின் பக்கம் திசை திருப்பிவிட்டு இவ்வாறான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் நோக்காக கூட இருக்கலாம் என்று அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் முன்னாள் கடற்றொழில் நீரியல்வள பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் இணைப்பாளர் ஐ.எம். றிஸ்வின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers