அனுராதபுரம் மாவட்ட குளங்களில் சல்வீனியா ஆதிக்கம் அதிகரிப்பு

Report Print Mubarak in சமூகம்

அனுராதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வான் கதவு வழியே வெளியாகிய மேலதிக நீர் காரணமாக கஹட்டகஸ்திகிலிய மற்றும் கலென்பிந்துனுவெவ பிரதேசத்திலுள்ள கிராமியக் குளங்களில் சல்வீனியா மற்றும் ஜபன் ஜபர தாவரங்களின் ஆக்கிரமிப்பு என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

சில வருடங்களுக்கு முன்பு சல்வீனியா நீர்த்தாவரங்கள் இப்பகுதி கிராமிய குளங்கள் பலவற்றை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.

இதனால் குளங்கள் மேடாகும் நிலையும் நீர் அழுக்குப் படிந்து நீர் மாசுறும் நிலையும் தோன்றியிருந்த நிலையில் வறட்சி நிலை ஏற்பட்டு குளங்கள் முற்றாக வற்றியதால் குளங்களிலிருந்த தாவரங்கள் விவசாய கழகங்களின் ஏற்பாட்டில் முற்றாக எரிக்கப்பட்டன.

இதனால் குளங்களில் மேற்படி தாவரங்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. எனினும் தற்போதைய மழையுடனான கால நிலை காரணமாக மீண்டும் சல்வீனியா மற்றும் ஜபன் ஜபர உள்ளிட்ட பல்வேறு நீர்வாழ் தாவரங்களின் ஆக்கிரமிப்பு கிராமியக் குளங்கள் மாத்திரமின்றி ஹுருளுவெவ, மஹனதராவ போன்ற பாரிய குளங்களிலும் ஏற்பட்டுள்ளன.